மெஸ்ஸியின் மாயாஜாலமான கோல் அர்ஜெண்டினா அணி வெற்றி

ரஷ்யா:
மெஸ்ஸியின் மாயாஜாலமான கோல் அர்ஜெண்டினா அணியை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற செய்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடையவுள்ள நிலையில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி நேற்றைய ஆட்டத்தில் பெற்ற அபார வெற்றியால் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அர்ஜெண்டினா அணி, நைஜீரிய அணியுடன் மோதியது. இந்த போட்டியில் வெல்லும் அணியே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்ததால் இரு அணிகளும் கடுமையாக போராடின.

அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி கடந்த இரண்டு போட்டிகளில் கோல் எதுவும் போடாததால் அவருக்கு தனிப்பட்ட முறையிலும் நெருக்கடி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போட்டியில் ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி ஒரு அருமையான மாயாஜால கோலை அடித்தார்.

இதனால் அர்ஜெண்டினா முதல் பாதியின் முடிவில் 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நைஜீரியா ஒரு கோல் போட்டு சமன்படுத்தியதால் ஆட்டம் விறுவிறுப்பானது.

இந்நிலையில் அர்ஜெண்டினாவின் மார்கஸ் ரோஜோ அபாரமாக ஒரு கோல் அடித்ததால் அர்ஜெண்டினா அணி 2-1 என முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அர்ஜெண்டினா அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!