மேற்கிந்திய தீவை பழி தீர்த்த கோஹ்லி படை… துவம்சம் செய்த ரோகித்!

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில், பகல்-இரவு போட்டியாக நடைபெற்றது.

அதன் படி நாணயசுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்தே இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், கிடைத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரிகள் விளாசியதால், அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறியது.

முதல் விக்கெட்டிற்கு ராகுல், ரோகித் சர்மா ஜோடி 227 ஓட்டங்கள் எடுத்தத போது, ராகுல் 102 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணியின் தலைவர் கோஹ்லி வந்த வேகத்தில் முதல் பந்திலே பெளலியன் திரும்பினார்.

இருப்பினும் ஸ்ரேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 150 ஓட்டங்கள் குவித்தார்.138 பந்துகளில் 5 சிக்சர், 17 பவுண்டரி என 159 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா வெளியேறியாவுடன் ஷ்ரேயஸ் அய்யர் தன்னுடைய அதிரடியால் 53 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் வந்த இளம் வீரர் ரிஷப் பந்த் 39 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, இந்திய அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ஓட்டங்கள் குவித்தது.

இதனால் 388 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணியின்

ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 78 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவருக்கு அடுத்து அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 75 ஓட்டங்கள் வெளியேற, அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்ட் முதல் பந்திலே பெளலியன் திரும்பியதால், மேற்கிந்திய தீவு அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கடைசி கட்டத்தில் அந்தணியின் ஆல் ரவுண்டரான கீமோ பால் போராடிய போதும் அவர் 46 ஓட்டங்களில் ஆட்டமிழக்க,

ஆட்டத்தின் முடிவில் மேற்கிந்திய தீவு அணி 43.3 ஓவரில் 280 ஓட்டங்களில் ஆல் அவுட்டாக, இந்திய அணி 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். மொகமது ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.

Sharing is caring!