ரொஞர்ஸ் கிண்ணம்: ரபேல் நடால்- பியான்கா ஆண்ட்ரெஸ்கு சம்பியன்

கனடாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 138 ஆண்டுகள் பழமையான ரொஞர்ஸ் கிண்ணம், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இத்தொடர், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடின தரையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடாலும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கனடாவின் இளம் வீராங்கனையான பியான்கா ஆண்ட்ரெஸ்குவும்  சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

சரி தற்போது முதலாவதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்,

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடாலும், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ்வும்  பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், நடாலுக்கு, மெட்வெடேவ் சவாலாக திகழ்ந்து நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அந்த எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய அனுபவ முன்னணி வீரர் நடால், செட்டை எவ்வித அழுத்தமும் போட்டியும் இல்லாமல் 6-0 என எளிதாக கைப்பற்றி சம்பியன் பட்டம் வென்றார்.

நடாலுக்கு இது ஐந்தாவது சம்பியன் பட்டமாகும். இதற்கு முன்னதாக நடால், 2005ஆம், 2008ஆம், 2013ஆம், 2018ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
…………..

அடுத்ததாக பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்,

இரசிகர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், கனடாவின் இளம் வீராங்கனையான பியான்கா ஆண்ட்ரெஸ்குவும், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையுமான செரீனா வில்லியம்சும் போட்டியிட்டனர்.

வரலாற்று சாதனையுடன் இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்த பியான்கா ஆண்ட்ரெஸ்கு, 3-1 முன்னிலைப் பெற்ற போது செரீனா வில்லியம்ஸ், உபாதைக் காரணமாக போட்டியிலிருந்து வெளியேற நேரிட்டது.

இதனால், கனடாவின் 19 வயது வீராங்கனையான பியான்கா ஆண்ட்ரெஸ்கு சம்பியனாக அறிவிக்கப்பட்டார். 50 ஆண்டுக்கால வரலாற்றில் இத்தொடரில், கனேடிய வீராங்கனையொருவர் சம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், இத்தொடரில் மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!