ரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 337 ரன்களை வெற்றி இலக்காக, இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில்  நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல், ரோஹித் களமிறங்கினார்கள். இருவரும் முதலில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தனர். இதனால் முதல் பவர்பிளேயில் 53 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

இதன் பின்னர் ரோஹித் அரைசதம் அடித்தார். தவான் இல்லாத நிலையில், ரோஹித் ஷர்மா, ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.3 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ராகுலும் அரைசதம் அடித்தார். 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  ரியாஸ் பந்துவீச்சில் ராகுல் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 136 ரன்களை சேர்த்தது.

ராகுலை தொடர்ந்து, கோலி களமிறங்கினார். அற்புதமாக ஆடி வந்த ரோஹித்  85 பந்தில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் தனது 24-ஆவது ஒருநாள் சதத்தை  பதிவு செய்தார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் ரோஹித் அடிக்கும் 2-ஆவது சதம் இதுவாகும். மேலும், உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த 2-ஆவது வீரர் என்ற பெருமையையும் ரோஹித் பெற்றார். மேலும், சர்வதேச போட்டிகளில் 358 சிக்ஸர்களை அடித்து தோனியின் சாதனையையும் ரோஹித் முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி இதுவரை 355 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

தொடர்ந்து கோலி, ரோஹித் நன்றாக ஆட  35.2 ஓவர்களில்  ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 200 ரன்களை கடந்தது. 113 பந்துகளில் 140 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசன் அலியின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை ரோஹித் சர்மா இழந்தார். இதையடுத்து, அதிரடி ஆட்டக்காரர் பாண்ட்யா களமிறங்கினார். அப்போது, 40 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 248 ரன்கள் எடுத்திருந்தது.

அதிரடி ஆட்டக்காரர் பாண்ட்யா சிக்ஸ், பவுண்டரி எடுத்து மிரட்டினார். இதனிடையே, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 51 பந்தில் 51-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.  அதிரடியாக ஆடி வந்த பாண்ட்யாவும் 26 ரன்னில் ஆமிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய தோனியின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆமிர் கலக்கினார். இதையடுத்து, தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார்.

கோலி 57 ரன்களை கடக்கும் போது, ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்களை கடந்தார். மொத்தம் 222 இன்னிங்சில் 11,000 ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலமாக குறைவான போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து, அவர் சச்சினின் (276 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்தார்.

இந்திய அணி ரன் மழை பொழிந்த வந்த நிலையில், 46.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கேப்டன் விராட் கோலி 71 ரன்களுடனும், விஜய் சங்கர் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கப்பட்டது. கோலி 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆமீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பவுலர்கள் நன்றாக பந்து வீசினார்கள். குறிப்பாக ஆமிர். இதனால், சிக்ஸ் போகவில்லை, பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது களத்தில் இருந்த ஜாதவ், சங்கரால்.

இறுதியில், 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்களை குவித்து, பாகிஸ்தான் வெற்றி பெற 337 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. விஜய் சங்கர் 15, ஜாதவ் 9 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர். உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் 140, கோலி 77, ராகுல் 57 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஆமிர் 10 ஓவர்களை வீசி 47 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து, கோலி, பாண்ட்யா, தோனியின் ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Sharing is caring!