சர்வதேச இருபதுக்கு தொடரை 01 க்கு 01 என பங்களாதேஷ் சமநிலைப்படுத்தியுள்ளது

ஷகீப் அல் ஹசனின் சகலதுறை ஆளுமையின் மூலம் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு தொடரை 01 க்கு 01 என பங்களாதேஷ் சமநிலைப்படுத்தியுள்ளது.

இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் பங்களாதேஷ் 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

டாக்காவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சார்பாக லிட்டன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 4 ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

தமிம் இக்பால் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய லிட்டன் தாஸ் 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களை விளாசினார்.

செளம்யா சர்கார் 32 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஷகிப் அல்ஹசன் – மஹமதுல்லா ஜோடி வீழ்த்தப்படாத ஐந்தாம் விக்கெட்டுக்காக 42 பந்துகளில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

மஹமதுல்லா 21 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 43 ஓட்டங்களையும், ஷகிப் அல்ஹசன் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 42 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைக் குவித்தது.

212 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

இவின் லூவிஸ் ஓர் ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

நிகோலஸ் பூரான், சிம்ரோன் ஹெட்மர், டெரன் பிராவோ ஆகியோராலும் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை.

ஷாய் ஹோப் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்​.

இறுதியில் மேற்கிந்தியதீவுகள் 19 தசம் 2 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ளன.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியில் வெற்றியீட்டுகின்ற அணி தொடரை கைப்பற்றும்

Sharing is caring!