லசித் மாலிங்க தலைவர் பதவியில் நீடிப்பாரா?

தோல்விக்கான காரணம் தலைமைத்துவமாயின் தாம் விலகத் தயார் என இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கைக் குழாம் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளது.

இந்தத் தொடரை இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நாடு திரும்பிய இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ளார்.

அணியை தான் பொறுப்பேற்கும் போது தரவரிசையில் ஒன்பதாமிடத்தில் இருந்ததாகவும் அந்த நிலைக்கு செல்லும் முன்னர் யாரும் அது தொடர்பில் கேள்வியெழுப்பவில்லை எனவும் ஏன் 9ஆம் இடத்துக்கு சென்றீர்கள் என்பதையும் கேட்கவில்லை எனவும் எனவே நாம் இருபதுக்கு 20 போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என லசித் மாலிங்க இதன்போது கூறியுள்ளார்.

திறமையை வெளிப்படுத்தாத அணியொன்றை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு சில காலங்கள் செல்லும் எனக் கூறிய லசித் மாலிங்க, கடந்த ஒன்றரை வருடங்களில் இலங்கை தேசிய அணியின் பயிற்றுநர்களாக எத்தனை பேர் செயற்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையில் சிறந்த பயிற்சிகள் கிடைத்தனவா என்பதை அதனை வைத்து மதிப்பிட முடியும். அல்லது தற்போதைய பயிற்றுநர்களினால் பயிற்சிகள் கிடைக்கப்பெற்றனவா என்பதை அறிய முடியும். எதிர்காலத்தில் புதிய பயிற்றுநர் உள்ளிட்டோர் முன்னோக்கிச் செல்வார்களாயின் அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக தொடர்ந்து பேசிய லசித் மாலிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தோல்விக்கான காரணம் தலைமைத்துவம் என யாராவது கூறுவார்களாக இருந்தால், வகுப்பறையில் கல்வி நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறாமல் அணித்தலைவரையே மாற்றவேண்டி ஏற்பட்டால் தான் அதற்கு தயார் என மீண்டும் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காகவே தான் விளையாடுவதாகவும் தன்னால் தனியாக வெற்றியீட்ட முடிந்தால் அதனையும் செய்வதாகவும் அதனை செய்யமுடியாத பட்சத்தில் விலகிச் செல்வதற்குத் தான் தயாரெனவும் இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட்அணியின் தலைவர் லசித் மாலிங்க கூறியுள்ளார்.

Sharing is caring!