லிவர்பூல் அணிக்கு எதிராக இரண்டாவது அதிர்ச்சி!

லிவர்பூல் அணிக்கு எதிராக நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலாந்து எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் கோல் போட்டது கனவுபோல் இருப்பதாக செல்சி வீரர் ரோஸ் பார்க்கிலி கூறியுள்ளார்.

அந்த ஆட்டத்தின் 13ஆம் நிமிடத்தில் லிவர்பூலை எதிர்த்து ஆடிய செல்சியின் வில்லியன் முதல் கோலை போட, ஆட்டத்தின் 64ஆம் நிமிடத்தில் செல்சியின் இரண்டாவது கோலும் விழ, தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் லிவர்பூல் மண்ணைக் கவ்வியது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் சென்ற சனிக்கிழமை வாட்ஃபர்ட் அணியிடம் தோல்வியைத் தழுவிய லிவர்பூல் அதற்கு முன் 18 ஆட்டங்களில் தோல்வியடையவில்லை.

30 ஆண்டுகளில் பிரிமியர் லீக் கிண்ணத்தை முதன் முறையாக வெல்லும் வாய்ப்பை அந்த அணி பெற்றுள்ளதாக கருதப்பட்டு வந்த சமயத்தில், தொடர்ச்சியாக இரு ஆட்டங்களில் லிவர்பூல் அணி தோற்றுள்ளது அதன் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வாட்ஃபர்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றபின் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், நேற்றைய ஆட்டத்தில் ஏழு மாற்றங்களை செய்தார். செல்சியை எதிர்கொண்ட லிவர்பூல் அணி ஒன்றும் சாதாரணமானதல்ல. அந்தக் அணியில் லிவர்பூல் அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த வெர்ஜில் வான் டைக், சாடியோ மானே, ஆண்டி ரொபர்ட்சன், ஜோ கோமெஸ் போன்றவர்கள் நேற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

காற்பந்து உலகில் தற்பொழுது கோல்காப்பாளர்களுக்கு கெட்ட காலம் போலும். சென்ற ஞாயிறன்று மான்செஸ்டர் யுனைடெட், எவர்ட்டன் அணிகள் மோதிய போதும் அந்த இரு அணிகளின் கோல்கபாப்பாளர்களும் தங்களுக்கு எதிராக விழுந்த கோல்களுக்கு காரணமாக இருந்தனர்.

அதுபோல்தான் நேற்றும். லிவர்பூலுக்கு எதிரான முதல் கோல் அதன் கோல்காப்பாளரான ஏட்ரியனின் தவறால் நேர்ந்தது. ஆனால், செல்சியின் இரண்டாவது கோலை அப்படிக் கூற முடியாது.

அந்த கோலைப் போட்ட ரோஸ் பார்க்கிலி, பந்தை மைதானத்தில் செல்சி அணியின் பகுதியிலிருந்து எடுத்துச் சென்று தனியொரு ஆளாக லிவர்பூல் கோல்காப்பாளரைத் தாண்டி பந்தை வலைக்குள் உதைத்தார்.

ஆட்டத்திற்குப் பின் பேசிய பார்க்கிலி, “லிவர்பூலுக்கு எதிராக கோல் போடுவது மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.
இதற்கு முன் இரண்டு ஆட்டங்களில் சரிவர ஆடாததற்கு ஈடுசெய்யும் வகையில் மிகச் சிறந்த ஆட்டம் ஒன்றை கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்தது,” என்று கூறினார்.

Sharing is caring!