வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது – கவலைக்குரிய விடயம்

வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம் என முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் டி.எம், டில்ஷான் தெரிவித்துள்ளார்.

நாம் தேசிய அணியில் விளையாடிய காலப்பகுதியில் சில நாட்களில் போட்டிகள் முடிவடைந்து விமான நிலையத்திலிருந்து நேராக வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வோம். வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டி மிகவும் சிறந்தது. இலங்கையிலுள்ள ஒருநாள் தொடர்களை கவனத்திற்கொண்டால் இதுவே மிகவும் சிறந்த தொடர். மாகாணங்களுக்கு இடையிலான போட்டியைவிட சிறந்தது. தேசிய அணி வீரர்கள் விளையாடும் சிறந்த போட்டி.

பல வீரர்கள் இதில் கலந்துகொள்ளாமை கவலைக்குரியது. இதுகுறித்து வீரர்களிடம் வினவியபோது, உபாதைக்குள்ளாவார்கள் என்பதால் சில போட்டிகளில் விளையாட வேண்டாம் என கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். சில வீரர்கள் பயிற்சிகளுக்கு வந்து 10, 15 பந்துகளையே வீசுவர். ஏன் இவ்வாறு இடம்பெற்றுள்ளது என எனக்குத் தெரியவில்லை. வீரர்களுக்கு பயிற்சியே அவசியமானது. பயிற்சியைவிட போட்டியொன்றில் விளையாடுவது என்பது சிறந்தது. துப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைப் பெறமுடியாத காலப்பகுதியில் இந்தத் தொடர் விசேடமானது.

அவர்களால் ஓட்டங்களைப் பெற்று, இங்கிலாந்து தொடருக்கு முன்னர் இந்தத் தொடர் முக்கியமானது. யார் இவற்றை முன்னெடுக்கின்றர் என எனக்குத் தெரியவில்லை. போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என முகாமைத்துவத்தினால் அறிவிக்கப்பட்டால், அதனை வீரர்களும் விரும்புவர். இலகுவாகவிருப்பதற்கு பழகியுள்ளனர். இதனை நிறுத்த வேண்டும் என டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!