விக்கெட் இழப்பின்றி 133 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து நிர்ணயித்த 268 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 133 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், ஆட்டத்தின் ஐந்தாம் நாளான நாளைய தினம் மேலும் 135 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 249 ஓட்டங்களையும், இலங்கை 267 ஓட்டங்களையும் பெற்றன.

நான்காம் நாளான இன்று 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களுடன் நியூஸிலாந்து இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

B.J.வட்லிங் 77 ஓட்டங்களையும், போல்ட் 26 ஓட்டங்களையும், வில்லியம் சொமர்விலி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

இன்றைய தினத்தில் லஹிரு குமார 2 விக்கெட்களையும், தனஞ்சய டி சில்வா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றி இலக்கான 268 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை சார்பாக திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஜோடி 133 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

தனது 23 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தைக் கடந்த திமுத் கருணாரத்ன 67 ஓட்டங்களுடனும், தனது ஆறாவது டெஸ்ட் அரைச்சதத்தை எட்டிய லஹிரு திரிமான்ன 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

Sharing is caring!