விளையாடும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் எதிர்ப்பார்ப்பில் காத்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவின் கெமரோன் பேன்க்கொப்ட் பந்தை சேதப்படுத்தியமையால், அவருக்கு 9 மாதங்கள் சர்வதேச போட்டித்தடை விதிக்கப்பட்டது.

இந்த செயலுக்கு அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் உபதலைவர் டேவிட் வோர்னர் ஆகியோர் உடந்தையாக இருந்தமை அம்பலப்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக, அவர்களுக்கும் ஒரு வருட போட்டித் தடையை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவானது.

அத்துடன், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கெமரூன் பென்க்ரொப்ட் ஆகியோர் தடை முடிந்து, மேலும் 12 மாதங்களின் பின்னரே அணித்தலைமை பொறுப்பை ஏற்கக்கூடிய தரத்தை அடைவார்கள் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்தது.

ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோர்னர், கெமரூன் பென்க்ரொப்ட் ஆகியோர் தடைமை அனுபவிக்கும் காலத்தில் 100 மணித்தியாலங்களுக்கு அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்தத் தடையானது உள்நாட்டில் மாத்திரம் அமுலில் இருப்பதுடன் வெளிநாடுகளில் நடைபெறும் கழகமட்டப் போட்டிகளில் விளையாட குறித்த மூவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் எதிர்ப்பார்ப்பில் காத்திருப்பதாக ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் குறித்த மூவரும் அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜஸ்டின் லாங்கர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!