வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் – திரிமான்ன

பாகிஸ்தானுக்கு எதிராக இன்று (02) நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் என அணித்தலைவர் லஹிரு திரிமான்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முதலாவது ஒருநாள் போட்டியில் முதல் 5 விக்கெட்களும் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இலங்கை அணி வீரர்கள் வெளிப்படுத்திய ஆற்றல் தொடர்பில் பெருமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் 10 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்றநிலையில் பாரிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும்போது பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். தசுன் சானக்கவும் ஜெஹான் ஜயசூரியவும் அந்தப் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றியதாக லஹிரு திரிமான்ன கூறியுள்ளார்.

பொறுப்பை உணர்ந்து இன்றைய போட்டிக்கு அணி வீரர்கள் தயாராக வேண்டும். 300 ஓட்டங்களைப் பெறும் பட்சத்தில் 4, 5 துடுப்பாட்ட வீரர்களில் யாரேனும் ஒருவர் பெரிய ஓட்ட எண்ணிக்கையொன்றை கடப்பார் என நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

அதேநேரம், தாம் திருத்திக்கொள்ள வேண்டிய பல்வேறு இடங்கள் இருக்கின்றதாகவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் ஓட்டங்களை கட்டுப்படுத்தினார்கள். எனவே, இன்றைய போட்டியில் அந்த முயற்சியை முறியடித்து துடுப்பெடுத்தாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அணித்தலைவர் என்ற ரீதியில் பெருமையடைவதாகக் கூறிய லஹிரு திரிமான்ன, போட்டியொன்றில் வெற்றியீட்ட ​வேண்டிய தேவை தமக்கு இருக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் தாம் விளையாடிய விதம் பெருமைக்குரியது எனவும் 3 துறைகளிலும் நாம் முன்னேற்றமடைய வேண்டும் எனவும் லஹிரு இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தான் முன்புகூறியது போல சில சந்தர்ப்பங்களில் சிறப்பாக பந்துவீசி, சில சந்தர்ப்பங்களில் ஓட்டங்களை வழங்கி விடுவதாகவும் துடுப்பெடுத்தாடும் போதும் களத்தடுப்பில் ஈடுபடும் போதும் அவ்வாறே. தாம் 50 வீதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் எஞ்சிய 50 வீதம் நிச்சயமாக நாம் முன்னேற்றமடைய வேண்டும் எனவும் இலங்கை அணித்தலைவர் லஹிரு திரிமான்ன தெரிவித்துள்ளார்.

Sharing is caring!