வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் இந்திய அணியில் தவான் இடம்பெறுவது சந்தேகம்

ஆசிய கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி பங்கேற்க உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷிகார் தவான் இடம் பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் அக்டோபர் 4ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

2வது டெஸ்ட் அக்டோபர் 12ம்  தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் துவக்க பேட்ஸ்மேன் தவான் இடம் பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து தொடரில் சொதப்பிய தவான் ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும், இவருக்கு பதிலாக இளம் வீரர்களான பிரித்வி ஷா, மன்யாக் அகர்வால் ஆகியோரை தேர்வு செய்ய தேர்வுக்குழு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

பந்துவீச்சாளர்கள் அஷ்வின், இஷாந்த் ஷர்மா இருவரின் உடல் தகுதியை பரிசோதிக்கும் யோ-யோ பரிசோதனை நாளை நடக்க உள்ளது.அதன் முடிவைப் பொறுத்து, இந்திய அணி தேர்வு செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ஒருமாத கால சுற்றுப்பயணத்தில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று முன்தினம்  இந்தியா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!