ஷான் மார்ஷ் சதம்: ஆஸி., 442 ரன்கள்

இங்கிலாந்துக்கு எதிராக அடிலெய்டில் நடக்கும் ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்டில், ஷான் மார்ஷ் சதமடித்து கைகொடுக்க, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 442 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 1–0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. ஹேண்ட்ஸ்கோம்ப் (36), மார்ஷ் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியாவின் ஹேண்ட்ஸ்கோம்ப் (36), முந்தைய நாள் ஸ்கோருடன் கூடுதலாக ஒரு ரன் கூட எடுக்காமல், ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ வெளியேறினார். பின் இணைந்த ஷான் மார்ஷ், டிம் பெய்னே ஜோடி பொறுப்பாக ஆடியது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த பெய்னே, அரைசதமடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த போது ஓவர்டன் பந்தில் பெய்னே (57) அவுட்டானார். ஸ்டூவர்ட் பிராட் ‘வேகத்தில்’ மிட்சல் ஸ்டார்க் (6) நிலைக்கவில்லை.

கிறிஸ் வோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷான் மார்ஷ், டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதமடித்தார். இவருக்கு பட் கம்மின்ஸ் ஒத்துழைப்பு தர, அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்தது. கம்மின்ஸ் (44) அரைசத வாய்ப்பை இழந்தார்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 442 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மார்ஷ் (126), லியான் (10) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஓவர்டன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Sharing is caring!