ஸ்டூவர் ப்ரோட் அணியின் வெற்றிக்கு பாரிய பங்காற்றுவார்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர் ப்ரோட் அணியின் வெற்றிக்கு பாரிய பங்காற்றுவார் என இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் கூறுகிறார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரொன்றில் விளையாடவுள்ளன.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி, காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஸ்டூவர்ட் ப்ரோட் பாரிய பங்காற்றுவார் என இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும், ஸ்டூவர்ட் ப்ரோட் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாக காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தொடரில் அவர் விளையாடாத பட்சத்தில் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து டெஸ்ட் குழாத்திலிருந்து ஸ்டுவர்ட் பிரொட் நீக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது அமையும்.

ஸ்டூவர்ட் ப்ரோட் டெஸ்ட் அரங்கில் இதுவரையில் 433 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

எவ்வாறாயினும், 5 வேகப்பந்து வீச்சாளர்களோடு சேர்த்து சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸுடன் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜொன்னி பெயார்ஸ்ரோ உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜொஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளராக செயற்படவுள்ளார்.

எனினும், கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் முதல் பயிற்சிப் போட்டியில் அவர் விளையாடவில்லை.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!