ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி

சீன ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி பெற்றார். முதல் சுற்றில் ரஷ்யாவின் எகடரினா மகரோவாவுடன் நேற்று மோதிய முகுருசா அதிரடியாக விளையாடி 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் மகரோவாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அவர் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஷுவாய் ஸாங் (சீனா), கர்லா சுவாரெஸ் (ஸ்பெயின்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

2வது சுற்றில் களமிறங்க இருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அனஸ்டேசியா செவஸ்டோவா (லாத்வியா) 3வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 2வது சுற்றில் ஜூலியா கோயர்ஜசுடன் (ஜெர்மனி) மோதிய லெசியா சுரெங்கோ4-6,  6-4, 2-2 என சமநிலை வகித்தபோது காயத்தால் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கோயர்ஜஸ் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Sharing is caring!