100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளர்

ஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற சிறப்பை இலங்கை அணியின் சாதனை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் பெற்றார்.

இங்கிலாந்திற்கு எதிராக இன்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இன்றைய போட்டியுடன் இலங்கை அணியின் சாதனை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இதனால் இலங்கை அணி வீரர்கள் தமது துடுப்புகளை உயர்த்தியவாறு ரங்கன ஹேரத்திற்கு தமது மரியாதையை செலுத்தினர்.

இங்கிலாந்து அணிக்கு கீட்டன் ஜென்னிங்ஸ் மற்றும் ரோரி பேர்ன்ஸ் ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.

இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் 10 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டதோடு ரோரி பேர்ன்ஸ் 9 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த மொயின் அலி சுரங்க லக்மாலின் பந்துவீச்சில் போல்டானார்.

சாதனை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் வீசிய பந்தில் அணித்தலைவர் ஜோரூட் போல்டானார்.

காலி சர்வதேச மைதானத்தில் அவர் வீழ்த்திய 100 ஆவது டெஸ்ட் விக்கெட்டாக இது பதிவானது.

இதன் மூலம் ஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரன் மற்றும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோர் இதற்கு முன்னர் அந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

Sharing is caring!