1500ஆவது மைல்கல் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர்!

டென்னிஸ் உலகில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்குரிய, சுவிஸ்லாந்தின் ரோஜர் ஃபெடரர், தனது 1500ஆவது மைல்கல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.

ரோஜர் ஃபெடரர், தற்போது சுவிஸ்லாந்தில் நடைபெற்றுவரும் உள்ளரங்க ஏடிபி தொடரில் விளையாடி வருகின்றார்.

இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் பீட்டர் கோஜோவ்ஸிக்கை, ஃபெடரர், எதிர்கொண்ட போட்டி அவரது 1500ஆவது மைல்கல் போட்டியாக அமைந்திருந்தது.

இதில் பெரிதளவான சவால்களை எதிர்கொள்ளாத ரோஜர் ஃபெடரர், 6-2, 6-1 என எளிதாக வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம், டென்னிஸ் போட்டிகளில் பீட்டர் கோஜோவ்ஸிக்கை, ரோஜர் ஃபெடரர், மூன்றாவது முறையாக வீழ்த்தினார்.

ஆண்டில் நடைபெறும் முக்கிய தொடர்களை மட்டும் தேர்வு செய்து விளையாடும் ரோஜர் பெடரருக்கு, இம்முறை சிறப்பான ஆண்டாக அமையவில்லை.

நான்கு முக்கிய கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களில் இம்முறை, அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடர், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இந்த மூன்று தொடரிலும் பெரிதும் சோபிக்காத ஃபெடரர், விம்பிள்டன் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்விக் கண்டார்.

இதற்கிடையில், பரிஸில் நடைபெறவுள்ள மாஸ்டர்ஸ் 1000 போட்டித் தொடரில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்துள்ளது. மேலும், பெடரர் நவம்பரில் லண்டனில் நடக்கவுள்ள ஏடிபி பைனல்ஸ் போட்டித் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரிலும், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலும் விளையாடுவதற்கு பெடரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரோஜர் ஃபெடரர், இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் ஆறு அவுஸ்ரேலிய பகிரங்க சம்பியன் பட்டங்கள், ஒரு பிரான்ஸ் பகிரங்க சம்பியன் பட்டம், எட்டு விம்பிள்டன் சம்பியன் பட்டங்கள், ஐந்து அமெரிக்க பகிரங்க சம்பியன் பட்டங்கள் அடங்கும்.

மூன்று வருடங்கள் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடாத ரோஜர் ஃபெடரர், இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார்.

அதேபோல, 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஃபெடரர், இங்கிலாந்தின் என்டி முரேவிடம் தங்க பதக்கத்தை இழந்தார்.

2008ஆண்டு ஆண்கள் இரட்டையர் பிரிவில், ரோஜர் ஃபெடரர்- ஸ்டென் வாவ்ரிங்கா ஜோடி சம்பியன் பட்டம் வென்றது.

சமீபகாலமாக டென்னிஸ் களத்தில் சோபிக்க தவறிவரும் ரோஜர் ஃபெடரர், எதிர்வரும் ஆண்டுடன் ஓய்வுப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Sharing is caring!