20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன்!

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் ‘இ’ பிரிவில் மும்பையில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் மும்பை-அரியானா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 19.3 ஓவர்களில் 143 ரன்னில் முடங்கியது.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்பட 4 வீரர்கள் டக்-அவுட் ஆனார்கள். தொடர்ந்து ஆடிய அரியானா 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் மூலம் சீனியர் 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக மும்பை அணிக்காக இறங்கிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

முன்னதாக பேட்டிங்கின் போது அவருக்கு பந்தை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவிய மும்பை அணி கால்இறுதி வாய்ப்பை பறிகொடுத்துள்ளது.

Sharing is caring!