3-வது டெஸ்ட்: பேர்ஸ்டோவுக்கு காயம்; போட்டியின் பாதியில் வெளியேறினார்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவுக்கு கையில் பலத்த காயம ஏற்பட்டதால், ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்தியா, ட்ரென்ட் பிரிட்ஜில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்னும், இங்கிலாந்து 161 ரன்னும் எடுத்தன. 168 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை இந்தியா துவங்கியது. இதில் துவக்க விக்கெட்கள் விழ, புஜாரா – கோலி ஜோடி சேர்ந்தனர். இருவரும் அரைசதம் கடந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதன் போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீசினார். அதனை எதிர்கொண்ட புஜாரா, ஜானி பேர்ஸ்டோவ் இருக்கும் இடம் பார்த்து அடித்தார். அந்த பந்தை கேட்ச் பிடிக்க நினைத்த பேர்ஸ்டோவின் இடதுகை நடுவிரலில் பந்து பலமாக பட்டு காயத்தை ஏற்படுத்தியது.

காயம் காரணமாக போட்டியின் இடையிலேயே அவர் களத்தைவிட்டு வெளியேறினார். கடுமையான காயத்தால் வலியில் துடித்த பேர்ஸ்டோவுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. பேர்ஸ்டோவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட இருப்பதாகவும், கடைசியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Sharing is caring!