34.2 ஓவர்களிலேயே சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்…125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தின், மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக கோலி 72, தோனி 56 (நாட் அவுட்), ஹர்திக் பாண்ட்யா 46, ராகுல் 48 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோச்  3, ஹோல்டர், காட்ரெல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

269 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள திணறினர். அந்த அணியின் நட்சத்திர வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான கிறிஸ் கெயில் 6 ரன்கள் மட்டுமே  எடுத்த நிலையில், அவுட்- ஆகி வெளியேற, வெஸ்ட் அணியின் வீழ்ச்சி தொடங்கியது.

சீட்டுக்கட்டை போன்று விக்கெட்டுகள் மளமளவன சரியவே, 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், 34.2 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில், அதிகபட்சமாக அம்பரீஸ் 31 ரன்களும், பூரன் 28 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் வேகப்பந்து வீ்ச்சாளர் முகமது சமி 6.2 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Sharing is caring!