4 ஆண்டுக்குமுன் கொலம்பியாவிடம் வாங்கியதை திருப்பிக் கொடுத்தது ஜப்பான் .

சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் 16ம் இடத்தில் இருக்கும் கொலம்பியா அணியை 61 வது இடத்தில் இருக்கும் ஜப்பான் சுலபமாகத் தோற்கடித்தது. கடந்த உலகக் கோப்பையில் கொலம்பியா, ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

அதற்கு பதிலடிதான் நேற்றைய ஆட்டம் என பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் 3 வது நிமிடத்திலேயே கோல்போஸ்ட் அருகில் கொலம்பியாவின் சான்செஸ் மொரினோவின் கையில் பந்து பட்டதற்காக ரெட் கார்டு மற்றும் பெனால்டி கொடுக்கப்பட்டது.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் முதல் ரெட் கார்டு இது. அடுத்த இரண்டு நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை ஜப்பானின் ஷின்ஜி ககாவா கோல் ஆக்கினார்.

அட்டாக் செய்ய முடியாமல் தவித்து வந்தது கொலம்பியா அணி.

ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கொலம்பியா அணி வீரர் ஜுயான் பெர்னாண்டோ முதல் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
முதல் பாதி 1-1 என்ற நிலையிலேயே முடிவடைய இரண்டாவது பாதியின் தொடக்கமும் கொலம்பியாவுக்கு அத்தனை திருப்தியானதாக இல்லை.

எனவே, வீரர்களை மாற்றியது கொலம்பியா. ரியல் மேட்ரிட் அணியில் பயிற்சி பெற்றவரும், சர்வதேச அளவில் இளம் நட்சத்திர வீரராகவும் உருவெடுத்துவரும் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 59வது நிமிடத்தில் களம் புகுந்தார்.

கோல் அடிப்பது மட்டுமின்றி, அதற்கான திறந்தவெளிகளை உருவாக்கித் தருவதிலும் சிறந்தவர் என்பதால் ஜேம்ஸுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. ஆனால், அவராலும் கோல் எதையும் அடிக்க முடியவில்லை.

தொடர்ந்து ஜப்பானின் அட்டாக் டிஃபன்டர்களைத் திணறடிக்க, கார்னர் கிக்கில் வந்த பந்தை ஹெட்டர் செய்து கோல் அடித்தார். 73வது நிமிடத்திலேயே கார்னரிலிருந்து ஹோண்டா அடித்த பந்தினை கோலாக மாற்றி ஒசாகோ ஜப்பானுக்கு முன்னிலையைப் பெற்றுத்தந்தார். அடுத்த 17 நிமிடங்களில் கொலம்பியா கோல் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்கிற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் சரித்திர வெற்றி பெற்றது

Sharing is caring!