5 விக்கெட்கள் பெறுதியை பதிவு செய்தார் தனஞ்சய

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய டெஸ்ட் அரங்கில் நான்காவது 5 விக்கெட் பெறுதியை பதிவு செய்தார்.

நியூசிலாந்திற்கு எதிராக இன்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல் கல்லை எட்டினார்.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து 71 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களையும் இழந்து தடுமாற்றமடைந்தது.

டொம் லெதம் 30 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு, அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஓட்டமின்றிய நிலையில் வெளியேறினார்.

ரொஸ் டெய்லர் மற்றும் ஹென்ரி நிக்கொல்ஸ் ஜோடி நான்காம் விக்கெட்டில் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹென்ரி நிக்கொல்ஸ் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ரொஸ் டெய்லர் அரைச்சதம் கடந்த நிலையில், 86 ஓட்டங்களைப் பெற்றார். மிச்செல் சான்ட்னர் ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

நியூசிலாந்து அணி 68 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது.

தொடர்ந்தும் மழையின் ஆதிக்கம் காணப்பட்ட நிலையில், இன்றைய முதல் நாள் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அகில தனஞ்சய 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். டெஸ்ட் அரங்கில் அவர் 5 விக்கெட் பெறுதியை பதிவு செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இலங்கையும் நியூசிலாந்தும் விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

Sharing is caring!