6ஆம் இடத்திற்கு முன்னேறினார் திமுத் கருணாரத்ன

இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தர வரிசையில் 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் புதிய தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டது.

புதிய தரவரிசையில் இலங்கை அணித்தலைவரான திமுத் கருணாரத்ன 733 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் அவர் 8 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இந்த தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் இரண்டாமிடத்திலும் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

இதற்கு முன்னர் டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் 8 ஆம் இடத்தில் இருந்த நியூசிலாந்தின் ட்ரன்ட் போல்ட் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

13 ஆம் இடத்தில் இருந்த இந்தியாவின் பும்ரா 7 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதனிடையே, இங்கிலாந்தின் உலகக்கிண்ண நாயகனான பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் சகலதுறை வீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று முன்தினம் லீட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் சகலதுறைகளிலும் பிரகாசித்ததோடு , 135 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்திற்கு வெற்றியையும் ஈட்டிக்கொடுத்தார்.

பென் ஸ்டோக்ஸ் இந்த தரவரிசையில் இரண்டாமிடத்திற்கு முன்னேறிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

டெஸ்ட் சகலதுறை வீரர்களின் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Sharing is caring!