ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் ஆளுக்கு ஒரு வீடு பரிசு! பிரபல வைர வியாபாரி அறிவிப்பு!

ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பதக்கம் வென்று வந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு கட்ட பணம் வழங்க உள்ளதாக குஜராத்தின் பிரபல வைர வியாபாரி ஸாவ்ஜி தொலாக்கியா தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்றாலும், அவர்கள் நாடு முழுவதும் மரியாதையையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இந்திய மகளிர் ஹாக்கி அணியை வெண்கல பதக்கத்தை வென்று நாடு திரும்ப ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பரிசு தரவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

தனது ஊழியர்களுக்கு வீடு, கார் போன்ற பரிசுகள் வழங்கி பிரபலமானவர் வைர வியாபாரி ஸாவ்ஜி தொலாக்கியா (Savji Dholakia).

தற்போது ஒலிம்பிக்கில் விளையாடி வரும் இந்திய மகளிர் ஆக்கி அணி, பதக்கத்துடன் நாடு திரும்பினால், அவர்கள் வீடு கட்ட தலா ரூ. 11 லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வீடு இருக்கும் வீராங்கனைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் கார் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்திற்கான பிளே-ஆஃப் போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.

Sharing is caring!