ஆரோன் பின்ச்சின் மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல்!

அவுஸ்திரேலியா அணி வீரரான பின்ச்சின் ஆட்டம் மற்றும் கேப்டன்சிப் சமீகாலமாக சரியில்லாத காரணத்தினால், அவரது மனைவிக்கு ரசிகர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால், சமீகாலமாக பின்ச் ஆட்டம் மற்றும் கேப்டன்சி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.

குறிப்பாக நியூசிலாந்தில் தற்போது நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தது.

அதுமட்டுமின்றி பின்ச்சும், முதல் போட்டியில் 1 ஓட்டமும், இரண்டாவது போட்டியில் 12 ஓட்டமும் அடித்துள்ளார்.

இதனால் அவரின் பேட்டிங் மற்றும் கேப்டன்சிப்பை ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். ஒரு சிலர் இதில் எல்லை மீறி, அவரது மனைவி எமிக்கு கொலை மிரட்டலும் பாலியல் மிரட்டல்களும் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாகசெய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ள எமி, இணையத்தில் போர்க்கொடி தூக்குபவர்கள் அவர்களின் நிஜ வாழ்க்கையை முதலில் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட கீழ்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களை ரசிகர் என்று மட்டும் கூறிக்கொள்ளாதீர்கள் என்று கடினமான வார்த்தைகளால் பதிலளித்துள்ளார்.

மேலும், சக அவுஸ்திரேலியா வீரரான கிளான் மேக்ஸ்வெல் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,ரசிகர்கள் இதை நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள் தான். தற்போது அவருக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இது மாறும். நீங்கள் செய்வது முற்றிலும் இழிவான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!