ஐரோப்பிய கால்பந்து போட்டி : இத்தாலி அணி 2-வது சுற்றுக்கு தகுதி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில் ரோம் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலி அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 19-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பில் கோலை நோக்கி அடிக்கப்பட்ட பந்தை துள்ளிக்குதித்து தன்வசப்படுத்திய இத்தாலி அணியின் கேப்டன் ஜியார்ஜியோ செலினி அதனை அதிரடியாக கோல்வலைக்குள் அடித்தார். ஆனால் வீடியோ நடுவரின் உதவியுடன் இதனை மறுபரிசீலனை செய்ததில் பந்து செலினி கையில் பட்டது தெரியவந்ததால் அது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

26-வது நிமிடத்தில் இத்தாலி அணி முதல் கோல் அடித்தது. சக வீரர் டொமினிகோ பிரார்டி கடத்தி கொடுத்த பந்தை இத்தாலி அணியின் மானுவல் லோகாடெல்லி கோலாக்கினார். 52-வது நிமிடத்தில் மானுவல் லோகாடெல்லி மீண்டும் ஒரு கோல் அடித்தார். 89-வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் சிரோ இம்மொபிள் இன்னொரு கோல் போட்டார்.

முடிவில் இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது.

இந்த வெற்றியின் மூலம் இத்தாலி 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முதல் அணியாக முன்னேறியது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் துருக்கியை வென்று இருந்தது. முதலாவது ஆட்டத்தில் வேல்சுடன் (1-1) டிரா கண்டு இருந்த சுவிட்சர்லாந்து அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இத்தாலி அணி தனது கடைசி 29 சர்வதேச போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் (24 வெற்றி, 5 டிரா) வீறுநடை போட்டு வருகிறது. அதில் கடைசி 10 ஆட்டங்களில் கோல் எதுவும் விட்டுக்கொடுக்காததும் அடங்கும்.

புச்சாரெஸ்டில் நேற்று நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவை தோற்கடித்து முதல் வெற்றியை தனதாக்கியது. உக்ரைன் அணியில் ஆன்ட்ரி எர்மாலன்கோ 29-வது நிமிடத்திலும், ரோமன் யாரெம்சக் 34-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 83-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை உக்ரைன் வீரர் ருஸ்லன் மாலினோவ்ஸ்கி வீணாக்கினார்.

இதே போல் கோபன்ேஹகனில் நடந்த பி பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை தோற்கடித்தது. 2-வது நிமிடத்திலேயே டென்மார்க் கோல் போட்டு அதிர்ச்சி அளித்த போதிலும், பிற்பாதியில் பெல்ஜியம் வீரர்கள் ஹசார்ட் (55-வது நிமிடம்), கெவின் டி புருனே (70-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து தங்கள் அணியை காப்பாற்றினர். 2-வது வெற்றியை சுவைத்த பெல்ஜியம் அடுத்த சுற்றை உறுதி செய்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் சுவீடன்-சுலோவக்கியா (இ பிரிவு, இந்திய நேரம்: மாலை 6.30 மணி), குரோஷியா-செக் குடியரசு (டி பிரிவு, நேரம்: இரவு 9.30 மணி), இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (டி பிரிவு, நேரம்: நள்ளிரவு 12.30 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.

Sharing is caring!