அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு மறுப்பு.. பைத்தியக்காரத்தனம் என முன்னாள் வீரர்கள் காட்டம் ! ரசிகர்கள் கொந்தளிப்பு !!

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளனர். இதனால் இப்போட்டி கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் ஆடும் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தின் பிட்ச், 4ஆவது மற்றும் 5ஆவது நாளில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எனினும் அஷ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது தான் ரசிகர்களின் ஆதங்கம்.

மேலும் வெளிநாட்டு அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களும் கூட அஸ்வினை சேர்க்காதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாதது மிகப்பெரும் தவறு, இது பைத்தியக்காரத்தனமான முடிவு என்று காட்டமாக கூறி உள்ளார்.

இதேபோல் அஸ்வினை இந்த போட்டியில் சேர்க்காதது வியப்பை அளித்ததாக முன்னாள் வீரர்கள் லிசா ஸ்தலேகர், டாம் மூடி ஆகியோர் கூறி உள்ளனர்.  இந்த தொடரில் நான்காவது முறையாக ஆடும் லெவனில் இருந்து அஷ்வின் நீக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக புகழ்பெற்ற வர்ணனையாளர்கள் ஆலன் வில்கின்ஸ் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் கூறி உள்ளனர்.

ஓவல் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், அஷ்வின் பெயர் விடுபட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கூறி உள்ளார். அஸ்வின் மற்றும் முகமது ஷமி ஆகியோரை சேர்க்காததன் மூலம் தோல்வியை விரும்புவது போல் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ரசிகர்களும் தங்கள் கருத்தையும் ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பதிவிட்டுள்ளனர். எனினும் இந்திய கிரிக்கெட் வாரியம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

Sharing is caring!