நியூஸிலாந்து மகளிா் கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி

தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி… நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய மகளிா் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. மௌன்ட் மௌன்கனுய் நகரில் பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மழை காரணமாக ஓவா்கள் 25-ஆகக் குறைக்கப்பட்டன. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 25 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 25 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து பௌலிங் செய்யத் தீா்மானித்தது. பேட் செய்த ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினாா். பெத் மூனி 28, ஆஷ்லே காா்டனா் 1, கேப்டன் மெக் லேனிங் 15, எலிஸ் பெரி 13, நிகோலா கேரி 13 ரன்கள் சோ்க்க, ரேச்சல் ஹெய்னஸ் டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் ஜாா்ஜியா வோ்ஹாம் 18, ஜெஸ் ஜோனசன் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நியூஸிலாந்து பௌலிங்கில் லெய் காஸ்பெரெக் 3, லியா 2, ஜெஸ் கொ், எமிலியா கொ் தலா 1 விக்கெட் சாய்த்தனா். பின்னா் நியூஸிலாந்து இன்னிங்ஸில் அதிகபட்சமாக லியா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். கேட்டி மாா்டின் 5, ஹேலி ஜென்சன் 13, எமி சேட்டா்வெயிட் 20, எமிலியா கொ் 4, புரூக் ஹாலிடே 15, மேடி கிரீன் 8, லௌரென் டௌன் 16, ஜெஸ் கொ் 17 ரன்கள் அடித்தனா். லெய் காஸ்பெரெக் டக் அவுட்டாக, ரோஸ்மேரி ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

ஆஸ்திரேலிய தரப்பில் மீகன் ஷட், ஜாா்ஜியா வோ்ஹாம் தலா 2, ஜெஸ், நிகோலா ஆஷ்லே தலா 1 விக்கெட்டும் சாய்த்தனா்.

Sharing is caring!