ராஜஸ்தானை 10 விக்கெட்டுகளால் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது பெங்களூர்

ஐ.பி.எல். இருபதுக்கு 20 தொடரின் 16 ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

மும்பை மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சிவம் டுபே 46 ஓட்டங்களையும் ராகுல் டிவெட்டியா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், சிராஜ் மற்றும் ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் ஜேமீசன், கேன் ரிச்சட்சன் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணி, 16.3 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியானது ஐ.பி.எல். வரலாற்றில், சேஸிங்கில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்த மூன்றாவது சந்தர்ப்பமாகும்.

முன்னதாக 2017ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் லின் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் 184 ஓட்டங்களை இணைப்பாட்டமாக கொண்டு போட்டியை நிறைவு செய்ததே முதல் சாதனையாக உள்ளது.

இதன்போது தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக 6 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்று தனது முதல் சதத்தை பூர்த்திசெய்த தேவ்தத் படிக்கல் தெரிவுசெய்யப்பட்டார்.

Sharing is caring!