பிரபல நட்சத்திர வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான பிரன்டன் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். +

ஜிம்பாப்வே அணிக்காக 2004 முதல் விளையாட ஆரம்பித்த டெய்லர், 34 டெஸ்ட், 205 ஒருநாள், 45 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அயர்லாந்துக்கு எதிராகத் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தில் விளையாடியுள்ளார்.

இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெய்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர், ஆண்டி ஃபிளவர்.

அவருடைய சாதனையை முறியடிக்க டெய்லருக்கு 110 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் மட்டும் எடுத்ததால் ஜிம்பாப்வே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் அவர் உள்ளார். எனினும் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்கள் அடித்து, அதிக சதங்கள் அடித்த ஜிம்பாப்வே வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் ஆண்டி ஃபிளவர், கிராண்ட் ஃபிளவருக்கு அடுத்ததாக 3-ம் இடத்தில் உள்ளார் டெய்லர். 318 இன்னிங்ஸில் 9938 ரன்கள் எடுத்துள்ளார். அதிக சர்வதேச சதங்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலிலும் டெய்லருக்கே முதல் இடம். அவர் மொத்தம் 17 சதங்களை விளாசியுள்ளார்.

Sharing is caring!