சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் அணி இளம் வீரர்

நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. பஞ்சாப் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணிக்கு எதிராக எதிர்பாராத தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் பஞ்சாப் அணியின் வீரர் தீபக் ஹூடா, இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்திருந்த புகைப்படம் ஒன்று சூதாட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி ஆரம்பமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ‘ஆரம்பிக்கலாங்களா’ என கேப்ஷன் கொடுத்து ஹெல்மெட்டை அணியும் தனது படத்தை பகிர்ந்திருந்தார் ஹூடா.

அது தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. அவரது இந்த செயல் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. ஆட்டத்தை ஆடும் லெவனில் அவர் விளையாடுவதை உறுதி செய்யும் வகையில் இதை ஹூடா சொல்லி இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த நிலையில் தான் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக ஊழல் தடுப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹூடா, ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!