டெல்லி அணி வீரர் அன்ரிச் நோர்ட்ஜேவுக்கு கொரோனா

டெல்லி அணி வீரருக்கு கொரோனா… டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடும் அன்ரிச் நோர்ட்ஜே, அணியில் இணைவதற்கு முன்னதாக கொரோனா தடுப்பு தனிமை முகாமில் இருந்தார். அவர் கொரோனா தடுப்பு தனிமை முகாமுக்கு வந்தபோது அவருக்கு தொற்று இல்லை. எனினும் தனிமை முகாமில் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என டெல்லி அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிசிசிஐ விதிமுறைப்படி வீரருக்கோ அல்லது போட்டியில் தொடர்புடைய பணியாளர்களுக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் தங்களை 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது அறிகுறி தென்பட்ட முதல் நாள் அல்லது தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நாள் ஆகியவற்றில் எது முதலில் வருகிறதோ அதிலிருந்து 10 நாள்கள் தனிமை முகாமில் இருக்க வேண்டும்.

அன்ரிச் நோர்ட்ஜே, கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடிவிட்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக மும்பை வந்தார். பின்னர் அவர் அங்கு 7 நாள்கள் கொரோனா தடுப்பு தனிமை முகாமில் இருந்த நிலையில், தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அணியில் முன்னணி ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது அன்ரிச் நோர்ட்ஜேவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்போது அணியை ரிஷப் பந்த் வழி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!