சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா

சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன்.

சச்சின் தெண்டுல்கர் மும்பை:

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.

2-வது அலை மற்றும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. முக்கிய பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:-

சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன்.

எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த சாலை விழிப்புணர்வு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் அணிக்கு தெண்டுல்கர் கேப்டனாக பங்கேற்றார். இதில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்றன.

இதனால் அந்த போட்டியில் பங்கேற்ற மற்ற வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ராய் பூரில் நடந்த இந்த போட்டியில் ரசிகர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

Sharing is caring!