CRPF வீரர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தடை!!

அதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் CRPF வீரர்கள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையான CRPF, தனது வீரர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரகசியத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் சேவை ஆகியவையே தகவல் பாதுகாப்பின் அடிப்படை நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான கட்டுப்பாடற்ற பயன்பாடு பாதுகாப்பு மீறலுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி போன்களை ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் போன் என இரண்டாக பிரித்துள்ளது CRPF. அதேபோல் பயன்பாட்டு இடங்களையும் உயர், நடுத்தரம் மற்றும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவும் வரிசைப்படுத்தியுள்ளது. இதில், முக்கிய நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்கள் கையாளப்படாத இடங்களில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தடையில்லை.

முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தலைமை அலுவலக ஒப்புதலுக்குப் பின்தான் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன்கள் அனுமதிக்கப்படும். இதில் ஆலோசனை மேற்கொள்ளும் இடங்கள், முக்கிய ஆவணம் கையாளப்படும் இடங்கள் உள்ளிட்டவை அடங்கும். அதேநேரம், ஸ்மார்ட்போனில் கேமராவை பயன்படுத்துவது, பதிவு செய்வது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வீரர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று CRPF தெரிவித்துள்ளது.

Sharing is caring!