இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை கதறவிட்டு கோப்பையை வென்றது CSK!

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு (KKR) எதிரான இந்தியன் பிரீமியர் லீக் 2021 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி வெறும் 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்து கோப்பையை வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கடைசி ஓவர் வரை போராடி 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து கொல்கத்தா அணி சுருண்டது.

‘தல’ தோனியின் சிறந்த தலைமையில் மொத்தம் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்த வருடத்திற்கான ஐபில் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டிச் சென்றது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெசிஸ் முதலில் நிதானமாக ஆடினர். பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.

கெய்க்வாட் 32 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.

கொல்கத்தா பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டூ பிளெசிஸ், 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய உத்தப்பா, தன் பங்கிற்கு 31 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலியும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டார். 86 ஓட்டங்கள் குவித்த டூ பிளெசிஸ் கடைசி பந்தில் அவுட் ஆனார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்கள் குவித்தது. மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர்.

வெங்கடேஷ் அய்யர் 50 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2 ஓட்டங்களில் வெளியேறினார்.

ஷுப்மான் கில் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது CSK.

சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Sharing is caring!