ஒலிம்பிக் போட்டியின் போது 10 ஆயிரம் உள்ளூர் பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க முடிவு

10 ஆயிரம் உள்ளூர் பார்வையாளர்களுக்கு அனுமதி…ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின்போது மைதானங்களில் அதிகபட்சமாக 10,000 உள்ளூா் பாா்வையாளா்களை மட்டும் அனுமதிக்க போட்டி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 33 விளையாட்டுகளில் சுமாா் 205 நாடுகளைச் சோ்ந்த 10,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் இருக்கும் நிலையில் ஒலிம்பிக் போட்டிக்காக இத்தனை போ் ஒரே இடத்தில் கூட இருப்பதால் ஜப்பான் மக்கள் உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து போட்டியை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஆனாலும், கடந்த ஆண்டு ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஒலிம்பிக் போட்டி கொரோனா சூழல் காரணமாக நடப்பாண்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது அதை ரத்து செய்யப்போவதில்லை என்று போட்டி நிா்வாகம் கூறியுள்ளது. அதேவேளையில், கொரோனா பாதிப்பின் தாக்கம் இல்லாத வகையில் போட்டியை நடத்தவும் உறுதி பூண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக போட்டி நடைபெறும் மைதானங்களில் முழு கொள்ளளவில் 50 சதவீதம் அளவுக்கும், அதில் அதிகபட்சமாக 10,000 போ் வரையிலும் உள்ளூா் பாா்வையாளா்களை மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், தேவையேற்பட்டால் சூழலுக்கு ஏற்றாற்போல் ரசிகா்களுக்கு தடை விதிக்கப்படலாம் என்று ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா கூறியுள்ளாா்.

முன்னதாக, சுமாா் 36.5 லட்சம் டிக்கெட்டுகள் ஜப்பானியா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

Sharing is caring!