முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவு

சிறந்த குத்துச்சண்டை வீரரான டிங்கோ சிங், குத்துச்சண்டையை மேலும் பிரபலப்படுத்த தனது பங்களிப்பை வழங்கியதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் (வயது 42) காலமானார். 2017ம் ஆண்டு முதல் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, கடந்த ஆண்டு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார். எனினும், சிகிச்சை பலன்றி இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது.

டிங்கோ சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், குத்துச்சண்டை வீராங்கனை மோ கோம், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள மேரி கோம், சமூக வலைத்தளத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளார். டிங்கோவை தனது ஹீரோ என்று அழைத்து புகழாரம் சூட்டி உள்ளார் மேரி கோம்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘டிங்கோ சிங் ஒரு விளையாட்டு சூப்பர் ஸ்டார். சிறந்த குத்துச்சண்டை வீரர். அவர் பல விருதுகளை வென்றுள்ளார். குத்துச்சண்டையை பிரபலப்படுத்த தனது பங்களிப்பை வழங்கினார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!