கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி! ஒரு மிரட்டு மிரட்டிய ஜோப்ரா ஆர்ச்சர்: 8 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வி

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டியில், அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

அதன் படி முதலில் ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரரான துவக்க வீரர் ரோகித் சர்மா 12 ஓட்டங்களிலும், கேஎல் ராகுல் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கோஹ்லி, இந்த முறை ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்து பவுலியன் திரும்பினார்.

இருப்பினும், அறிமுக போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை அசால்ட்டாக பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக பறக்கவிட்டார். இதன் மூலம் 28 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 57 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ரிஷப் பண்ட் 30 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 11 ஓட்டங்கள், ஸ்ரேயாஸ் அய்யர் 37 ஓட்டங்கள் என அதிரடியாக ஆட, இந்திய அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் சேர்த்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரரான

பட்லர் 9 ஓட்டங்களிலும், ஜோசன் ராய் 40 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த அதிரடி வீரர் மலான் 17 ஓட்டங்களிலும் வெளியேற, ஆட்டம் இந்திய பக்கம் திரும்பியது.

ஆனால் இந்த ஆட்டத்தையே போர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் அப்படியே மாற்றினர். இந்திய அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.

இதனால் இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி வந்தது. ஆனால் சிறப்பாக விளையாடி வந்த பார்ஸ்டோவ் 25 ஓட்டங்களிலும், ஸ்டோக்ஸ் 46 ஓட்டம், இயான் மோர்கன் 4 என பவுலியன் திரும்பியதால், மீண்டும் ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது.

இறுதி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார்.

முதல் பந்தில் ஜோர்டன் 1 ஓட்டமும், 2-வது பந்தில் ஆர்ச்சர் பவுண்டரியும் 3-வது பந்தில் சிக்சர் அடிக்க ஆட்டம் மீண்டும் இங்கிலாந்து கையில் சென்றது.

4-வது பந்தில் 2 அகலப்பந்துகள் வீச, அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் மட்டுமே விட்டு தாகூர் கொடுத்தார். 5-வது பந்தில் ஜோர்டன் அவுட் ஆக, கடைசி பந்தில் 9 ஓட்டம் தேவைப்பட்டது.

அந்த பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

Sharing is caring!