4வது டி20 போட்டியிலும் வெற்றி – ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது அயர்லாந்து

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அயர்லாந்தின் மார்க் அடெய்ர் 4 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, 2வது மற்றும் 3வது போட்டியில் அயர்லாந்து அணிகள் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. கெவின் ஓ பிரையன் 47 ரன்னும், பால் ஸ்டிர்லிங் 38 ரன்னும், பால்பிர்னி 36 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. ஆனால் அயர்லாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் ஜிம்பாப்வே அணி சிக்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 64 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அபார வெற்றி பெற்றது.

அயர்லாந்து சார்பில் மார்க் அடெய்ர் 4 விக்கெட், ஷேன் கெட்கடே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அயர்லாந்து 3-1 என கைப்பற்றியுள்ளது.

Sharing is caring!