கொல்கத்தா அணியின் சாதனை; ஐபிஎல்-ல் 100வது வெற்றி பெற்றது

100வது வெற்றி… சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் தொடரில் தனது 100வது வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிவு செய்துள்ளது.

2008 ஆம் ஆண்டு முதல் 13 ஐபிஎல் தொடரில் விளாயாடி இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 99 போட்டிகளில் வென்றுள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2021 தொடரின் சன்ரைஸர் ஐதாராபாத் அணியுடனான தனது முதல் போட்டியில் வென்று 100வது வெற்றியை சுவைக்குமா என்று பலத்த எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து கொல்கத்தா அணியில் இருந்து தொடக்க வீரர்களாக நிதிஷ் ராணா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 53 ரன் சேர்த்தது.

சுப்மன் கில் 15 ரன்கள் எடுத்து ரஷித் சுழலில் கிளீன் போல்டாக ராணாவுடன் இணைந்தார் ராகுல் திரிபாதி. இருவரின் அனல் பறக்கும் ஆட்டத்தால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராணா 37 பந்திலும், திரிபாதி 28 பந்திலும் அரை சதம் அடித்தனர்.

2வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த இந்த ஜோடியை பிரித்தார் சேலம் எக்ஸ்பிரஸ் நடராஜன். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்திருந்த அந்த அணி, 160 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. கடைசி கட்டத்தில் களமிறங்கி சீறியெழுந்த தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னரை 3 ரன்னில் ஆட்டமிழக்க செய்து ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது கொல்கத்தா அணி. அதனையடுத்து அடுத்து வந்த ஜானி பார்ஸ்டோ அதிரடியாக ஆடி வேகம் காட்டினாலும் அதன் பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து கடைசியாக களமிறங்கி அப்துல் சமத் அடித்த சிக்ஸர்களால் துளிர்விட்ட நம்பிக்கையை கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி முடித்து வைத்தார் ரஸல். இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரின் சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளது கொல்கத்தா அணி. இந்த வருடத்தின் முதல் போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணி தனது ஐபிஎல் தொடரில் 100 வது வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை தொடர்ந்து மூன்றாவது அணியாக இந்த சாதனையைப் படைத்துள்ளது கொல்கத்தா அணி.

Sharing is caring!