சென்னை அணியை வீழ்த்தியது மும்பை…போலார்டு அபார ஆட்டம்

புதுடில்லி: சென்னைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் போலார்டின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். சென்னை அணிக்கு ருதுராஜ் (4) ஏமாற்றினார். பவுல்ட், பும்ரா, நீஷம், ராகுல் சகார் பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய மொயீன் அலி, 33 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், நீஷம் வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார்.

இவருக்கு ஒத்துழைப்பு தந்த டுபிளசி, பும்ரா வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்த போது பும்ரா ‘வேகத்தில்’ மொயீன் (58 ரன், 5 சிக்சர், 5 பவுண்டரி) வெளியேறினார். அபாரமாக ஆடிய டுபிளசி, இந்த சீசனில் தொடர்ந்து 4வது அரைசதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் 12வது ஓவரை வீசிய போலார்டு, டுபிளசி (50), ரெய்னா (2) ஆகியோரை அவுட்டாக்கி இரட்டை ‘அடி’ தந்தார்.

அடுத்து வந்த அம்பதி ராயுடு சிக்சர் மழை பொழிந்தார். குல்கர்னி, பும்ரா, பவுல்ட் பந்தில் தலா 2 சிக்சர் பறக்கவிட்ட ராயுடு, 20 பந்தில் அரைசதமடித்தார். பும்ரா பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு அனுப்ப சென்னை அணி 200 ரன்னை கடந்தது.சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது. ராயுடு (72 ரன், 7 சிக்சர், 4 பவுண்டரி), ஜடேஜா (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

போலார்டு கலக்கல்

கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (38), கேப்டன் ரோகித் சர்மா (35) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சூர்யகுமார் யாதவ் (3) ஏமாற்றினார். சென்னை அணிக்கு ‘பொல்லாதவனாக’ மாறிய போலார்டு சிக்சர் மழை பொழிந்தார். ஜடேஜா வீசிய 13வது ஓவரில் 3 சிக்சர் விளாசிய போலார்டு, ஷர்துல் தாகூர் வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி அடித்து 17 பந்தில் அரைசதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த குர்னால் பாண்ட்யா, லுங்கிடி வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த போது சாம் கர்ரான் பந்தில் குர்னால் (32) அவுட்டானார்.

சாம் கர்ரான் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா (16) நிலைக்கவில்லை. நீஷம் (0) ஏமாற்றினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. லுங்கிடி வீசிய 20வது ஓவரின் முதல் 5 பந்தில் அசத்திய போலார்டு 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் 2 ரன் எடுத்த இவர், வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன் எடுத்து வெற்றி பெற்றது. போலார்டு (87 ரன், 8 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.

Sharing is caring!