கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா- இந்திய தேசியக்கொடி ஏந்தி வந்த பஜ்ரங் புனியா

டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது.

போட்டிகள் அனைத்தும் முடிந்ததும் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் வண்ண லேசர் காட்சிகள், வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், இந்திய அணிக்கு மல்யுத்த போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றார்.

நிறைவு விழாவில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

விழாவின் முடிவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024-ம் ஆண்டு) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும், போட்டியை நடத்திய ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!