உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு

கொவிட் -19 காரணமாக ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கிண்ண தகுதிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 2022 டி-20 உலகக் கிண்ணத்திற்கான ஆசியா ஏ மண்டலத்திற்கான தகுதி சுற்றுப் போட்டி 2021 ஏப்ரல் 03 முதல் 09 ஆம் திகதி வரை குவைத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.

கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக அவை 2021 ஒக்டோபர் 23 முதல் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த தகுதி சுற்று போட்டிகளில் பஹ்ரைன், குவைத், மாலைதீவு, கட்டார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் விளையாடும்.

அதேபோல் ஆபிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்றுபோட்டிகள் ஏ, பி என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்னாபிரிக்காவில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இப் போட்டிகளும் தற்சமயம் 2021 ஒக்டோபர் 25-31 ஆம் திகதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தகுதி ஏ குழு கானா, லெசோதோ, மலாவி, ருவாண்டா, சீஷெல்ஸ், சுவாசிலாந்து  மற்றும் உகாண்டா ஆகியவை அடங்கும்.

தகுதி பி குழுவில் கேமரூன், மொசாம்பிக், சியரா லியோன், செயின்ட் ஹெலினா மற்றும் தான்சானியா ஆகியவை அடங்கும்.

கொவிட் -19 இன் விரிவான தற்செயல் திட்டமிடல் உறுப்பினர்களுடனும், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் பொது சுகாதார அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட செயல்முறையின் விளைவாக ஒத்திவைப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

Sharing is caring!