யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகளில் ரஷ்யா, வேல்ஸ், இத்தாலி அணிகள் வெற்றி

லீக் போட்டிகளில் ரஷ்யா வெற்றி… யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகளில் ரஷ்யா, வேல்ஸ், இத்தாலி அணிகள் வெற்றிபெற்றன.

முதலாவதாக நடைபெற்ற போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா, பின்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், 45வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் முதல் கோல் அடித்தார். இதனால், முதல் பாதியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என கோல் கணக்கில் ரஷ்யா முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை வீழ்த்தி நடப்பு யூரோ கோப்பையில் ரஷ்யா அணி வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள துருக்கி அணியும், வேல்ஸ் அணியும் மோதின. துருக்கி அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காத நிலையில், வேல்ஸ் அணியின் ஆரோன் ராம்சே மற்றும் கன்னார் ராபர்ட் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதனால், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி நடப்பு யூரோ கோப்பையில் வேல்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதேபோல், மூன்றாவது ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் இத்தாலி வீரர் மானுவேல் லோகடெல்லி கோல் அடித்து அசத்தினார். இரண்டாம் பாதியில், மானுவேல் லோகடெல்லி மேலும் ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இறுதியில் இதன்மூலம் 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை, இத்தாலி அணி எளிதாக வீழ்த்தியது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இன்றைய ஆட்டத்தில், குரூப் சி பிரிவில் உள்ள உக்ரைன் மற்றும் நார்த் மெசிடோனியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதேபோல், இரவு 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் அணியும், பெல்ஜியம் அணியும் மோதுகின்றன.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், குரூப் சி பிரிவில் உள்ள நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியா அணிகள் களமிறங்குகின்றன.

Sharing is caring!