ஷபாலி வர்மா அபாரம் – இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஒரே டெஸ்ட் டிராவில் முடிந்தது

அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா முதல் இன்னிங்சில் 96 ரன்னும், 2வது இன்னிங்சில் 63 ரன்னும் எடுத்தார்.

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டோலில் நடந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 121.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் நைட் 95 ரன்னும், பியூமாண்ட் 66 ரன்னும் எடுத்தனர், அசோபியா டுங்லி 74 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்தியா சார்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன்பின், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.
அறிமுக டெஸ்டிலேயே கலக்கிய ஷபாலி வர்மா 96 ரன்னில் கேட்ச் ஆனார். மந்தனா 74 ரன்னில் வெளியேறினார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 231 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் எக்கிள்ஸ்டோன் 4 விக்கெட்டும், நைட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாலோ ஆன் பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஷபாலி வர்மா சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 54 ரன்னும், பூனம் ராவத் 39 ரன்னும் எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஸ்நே ரானா பொறுப்புடன் ஆடி 80 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு டனியா பாட்டியா நன்கு ஒத்துழைத்தார். அவர் 44 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்த ஜோடி 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளது.
இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து சார்பில் எக்கிள்ஸ்டோன் 4 விக்கெட்டும், நடாலி சீவர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் இரு அணிகளுக்கு இடையிலான 4 நாள் கொண்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகி விருது இரு இன்னிங்சிலும் அரை சதமடித்து அசத்திய ஷபாலி வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.

Sharing is caring!