சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய தென் ஆப்பிரிக்கா

அனுமதி வழங்கியது… சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசிக்கு தென் ஆப்பிரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்காவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ‘தென் ஆப்பிரிக்காவில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60,000 பேர் வரை பலியாகி உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 3.3% பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோகன்ஸ்பெர்க் போன்ற முக்கிய நகரங்களில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக தென் ஆப்பிரிக்க மருத்துவ கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென் ஆப்பிரிக்கா அறியப்படுகிறது. ஆப்பிரிக்காவில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Sharing is caring!