ஐபிஎல் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் அனுமதி இல்லை; பிசிசிஐ துணைத் தலைவர் தகவல்

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

14வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 9ம் தேதி முதல் மே மாதம் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால், ஐபிஎல் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதிலும், குறிப்பாக மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தநிலையில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவிக்கையில், “நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே ஐபிஎல் போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பிசிசிஐ எடுத்து வருகிறது.

பயோ பபுள் எனப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது. வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.” என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Sharing is caring!