மேற்கிந்தியத் தீவுகளின் அபாரமான ஆட்டத்தினால் மீண்டும் வீழ்ந்தது இலங்கை..!!

ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் 1-0 என முன்னிலை பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணியானது மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு முத்தரப்பு சர்வதேச கிரிக்கெட் தொடர்பில் விளையாடி வருகிறது.இதில் முதலாவதாக நடைபெற்ற முடிந்த இருபதுக்கு : 20 தொடரை மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் ஆன்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணதிலக்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் வலுவான ஒரு அடித்தளத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.எனினும், அவர்களின் ஆட்டமிழப்பையடுத்து தொடர்ச்சியாக களமிறங்கிய வீரர்கள் நேர்த்தியான முறையில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

இதனால் வலுவான நிலையில் தொடக்கத்தை ஆரம்பித்த இலங்கை அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.தொடக்க வீரர்களான களமிறங்கிய அணித் தலைவர் திமுத் கருணாரத்ன (52), தனுஷ்க குணதிலக்க (55) ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 19.2 ஓட்டங்களை எதிர்கொண்டு 105 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.அவர்கள் இருவரின் அடுத்தடுத்த ஆட்டமிழப்பையடுத்து தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை அணியின் ஏனைய வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டம் இலங்கையின் இன்னிங்ஸை 49 ஓவர்களில் முடிவுக்கு கொண்டு வந்தது.

இதனிடையே அஷேன் பண்டார மாத்திரம் 60 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் உள்ளடங்கலாக அரைசதம் பெற்றார். பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ஜேசன் மொஹமட், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப், பொல்லார்ட், ஃபேபியன் ஆலன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.233 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 47 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு, 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை கடந்தது.

அணிசார்பில் ஆரம்ப வீரர்களாக கமளிறங்கிய லூயிஸ் மற்றும் ஹோப் ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 143 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.அதன் பின்னர் 28.2 லூயிஸ் 65 ஓட்டங்களுடன் சாமரவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த பிராவோவுடன் கைகோர்த்த ஷேய் ஹோப் 41 ஆவது ஓவரின் இறுதியில் மொத்தமாக 125 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவர் பெறும் 10 ஆவது சதம் இதுவாகும்.எனினும், 110 ஓட்டங்களுடன் சமாரவின் பந்து வீச்சில் அவர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற ஜேசன் மொஹமட் களமிறங்கினார்.பிராவோ – ஜேசன் மொஹமட் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிவர மேற்கிந்தியத்தீவுகள் அணி 47 ஓவர்களில் 236 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

ஆடுகளத்தில் பிராவோ 37 ஓட்டங்களுடனும், ஜேசன் மொஹமட் 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக ஷேய் ஹோப் தெரிவானார்.இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 12 ஆரம்பமாகவுள்ளது.

Sharing is caring!