இலங்கை திணறல்! தொடரும் மோசமான ஆட்டம்!!

மேற்கிந்த தீவு அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்கு 169 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், அந்தணி 8 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்து 99 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.

இலங்கை அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டி20, ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இலங்கை அணி இழந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21-ஆம் திகதி துவங்கியது.

அதன் படி முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணிக்கு துவக்க வீரர் டிம்யூத் கருணரத்னே 12 ஓட்டங்களில் வெளியேற, மற்றொரு துவக்க வீரரான லகிரு திருமன்னே மட்டும் மேற்கிந்திய தீவு அணியின் பந்து வீச்சை தாக்குபிடித்து 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்,

மற்ற வீரர்களில் தனஞ்சய டி சில்வா(13), நிரோஷன் டிக்வெல்லா(32) ஓட்டங்கள் எடுக்க, மற்ற அனைவரும் ஒற்றை இலக்கங்களில் பெளவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை அணி 169 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் துவங்கிய மேற்கிந்திய தீவு அணியில் துவக்க வீரர் கிராயாக் பரத்வேத் 3 ஓட்டங்களில் அவுட் ஆகினார்.அடுத்து வந்த வீரர்களில் ரகீம் கார்ன்வெல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆடி வருகிறார். இவரைத் தவிர அதிகபட்சமாக ஜோசு டா சில்வா 46 ஓட்டங்களும், கையில் மையிர்ஸ் 45 ஓட்டங்களும், ஜான் காம்பெல் 42 ஓட்டங்களும் எடுத்தனர்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்து 99 ஓட்டங்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால், இப்போட்டியில் நிச்சயம் மேற்கிந்திய தீவு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

அதே சமயம் இலங்கை அணி, தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினால், இந்த போட்டியில் இருந்து தோல்வியை தவிர்க்கலாம்.

Sharing is caring!