தென்னாபிரிக்க லெஜண்ட்ஸை இலகுவாக வீழ்த்திய இலங்கை லெஜண்ட்ஸ்

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் ஒன்பது விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் களம் காணும் வீதி பாதுகாப்பு உலக இருபதுக்கு : 20 சம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இதில் நேற்றிரவு ராஜ்பூர் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் ஜோன்டி ரோட்ஸ் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் லெஜண்ட்ஸ் அணியினரும், திலகரத்ன டில்சான் தலைமையிலான இலங்கை லெஜண்ட் அணியினரும் மோதினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியானது இலங்கை அணியினரின் பந்து வீச்சுகளில் திக்குமுக்காடி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர்.

அணி சார்பில் அதிகபடியாக ஆண்ட்ரூ புட்டிக் மாத்திரம் 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணிசார்பில் சனத் ஜெயசூரியா, ரங்கன ஹேரத், நுவான் குலசேகர ஆகியோர் தலா 2  விக்கெட்டுகளையும், திலகரத்ன டில்ஷான், தம்மிக பிரஷாத் மற்றும் அஜந்த மெண்டீஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

அதன் பின்னர் 90 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 13.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியலக்கை கடந்தது.

சனத் ஜெயசூரிய எட்டு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டில்ஷான் 40 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களுடனும், உபுல் தரங்க 31 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 4 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு, 11 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரங்கன ஹெரத் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி, தான் எதிர்கொண்ட 4 போட்டிகளில் 3 இல் வெற்றியை பதிவுசெய்து 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

Sharing is caring!